2 இராஜா 12: 17 – 21
பரிசுத்தம்பண்ணிவைத்த எல்லாவற்றையும் . . . எடுத்து ஆசகேலுக்கு அனுப்பினான்
மத்தேயு 13ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து நான்கு வகையான நிலத்தைப் பற்றி சொன்ன உவமையை வாசிக்கலாம். அதிக மண்ணில்லாமல், கற்பாறை நிறைந்த நிலத்தில் விதை விழுந்து முளைத்தாலும், அதிக நாட்கள் அவை வளருவதில்லை. யோவாசின் இருதயம் அப்படிப்பட்டதாயிருந்தது. நேற்று அவன் ஆலயத்தின் மீது வைத்திருந்த அன்பையும் அக்கறையையும் குறித்து பார்த்தோம். இன்று அவன் ஆலயத்திலிருந்த பொன்னையும் பொருட்களையும் எடுத்து எருசலேமுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வந்த சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்துவிடுகிறான் என்று பார்க்கிறோம். ஆசாரியனாகிய யோய்தாவின் நிழலில் இருந்தவரை கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்த யோவாஸ், யோய்தாவின் மரணத்துக்குப் பின் கர்த்தருக்குப் பிரியமில்லாதவைகள் பலவற்றை செய்தான் என்பது 2 நாளாகமம் 24ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல ஆரம்பம், நல்ல ஓட்டத்துக்கும் நல்ல முடிவுக்கும் உத்திரவாதம் அல்ல.
ஜெபம்
ஆண்டவரே, என் பிள்ளைகளின் உள்ளமும் என் குடும்பத்தாரின் உள்ளமும், ஒருபோதும் கற்பாறை நிறைந்த நிலமாக மாறிவிடாத படி அவர்களைக் காத்துக் கொள்ளும். ஆமென்.