2 இராஜா 14: 17- 29
யெரொபெயாமின் கையால் அவர்களை இரட்சித்தார்
யெரொபெயாமோ அல்லது இஸ்ரவேலரோ கர்த்தரின் பார்வைக்கு செம்மையனதைச் செய்யவில்லை, இருந்தாலும் இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்பதால் கர்த்தர் தம் ஜனத்தின் மீது இரக்கம் கொண்டு அவர்களை சீரியர்களின் பிடியிலிருந்து விடுவித்தார். ஆகையால் யெரொபெயாமின் நாட்களில் மக்களுக்கு யுத்தத்தில் வெற்றியும் செல்வச் செழிப்பும் கிடைத்தது. இந்த செல்வத்தின் மத்தியில் இஸ்ரவேலின் பாவங்கள் பெருகிக் கொண்டே போயின. ஆமோஸ், ஓசியா ஆகிய தீர்க்கதரிசிகள் யெரொபெயாமின் நாட்களில் கர்த்தருடைய எச்சரிப்பை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டேதான் இருந்தார்கள். மக்களில் பெரும்பாலானோர் அதைப் பொருட்படுத்தவில்லை. இன்றும் உலகில் பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகளுக்கும் அல்லது வெகுவாக வளர்ந்து வரும் நாடுகளுக்கும் அந்த நாட்டு மக்களின் பரிசுத்த வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. அதனால் கர்த்தர் நம்முடைய பாவ வாழ்க்கையைக் கண்டு கொள்ளவில்லை என்று அர்த்தமல்ல.
ஜெபம்
ஆண்டவரே, எங்களுடைய செல்வச் செழிப்பு எங்களை உம்மிடமிருந்து பிரித்துவிடாதபடி எங்களைக் காத்துக் கொள்ளும். ஆமென்.