2 இராஜா 15: 1 – 7
அவன் தன் மரணநாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்து
யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரனின் பெயர் அசரியா. அவன் ராஜாவானவுடன் அவனுடைய அரியணைப் பெயர் உசியா என்று மாறியது. அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் அரசாட்சியில் யூதாவில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது. இதைக் குறித்து 2 நாளாகமம் 26ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். யுத்தம், நகரத்தைக் கட்டுதல், விவசாயம் என்று அவன் கை வைத்த இடங்களிலெல்லாம் வெற்றியைக் கண்டான். பரிதாபமாக இந்த வெற்றிகளெல்லாம் உசியாவுக்குத் தற்பெருமையைக் கொடுத்தன. அவன் ராஜாவாகவும் ஆசாரியனாகவும் செயல்பட நினைத்தான். பழைய ஏற்பாட்டின் ஒழுங்கின்படி ஆசாரியன் என்பவன் கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவன். ஒரே ஆள் ராஜாவாகவும், ஆசாரியனாகவும் செயல்பட முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவரில்தான் ராஜா, தீர்க்கதரிசி, ஆசாரியன் என்ற மூன்று பாத்திரங்களும் ஒருவரில் இருக்கிறதைப் பார்க்கிறோம். உசியா, ஆசாரியரின் எச்சரிப்பை அசட்டை பண்ணினான். கர்த்தர் அவனுக்குக் குஷ்டரோகத்தைக் கொடுத்து வாதித்தார். கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பை மகிழ்ச்சியுடன் நிறைவேற்று. மற்றவர்களின் ஊழிய அழைப்பைப் பார்த்து இச்சிக்காதே!
ஜெபம்
ஆண்டவரே, நீர் எனக்குக் கொடுத்திருக்கும் பொறுப்பை மகிழ்ச்சியோடு நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். ஆமென்.