காலைத் தியானம் – ஜூன் 26, 2020

2 இராஜா 15: 8 – 31                        

ஐந்து பொல்லாத அரசர்கள் 

இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை அரசாண்ட முதல் ராஜாவான யெரொபெயாம் முதல் கடைசி ராஜாவான ஓசெயா வரை கர்த்தரின் பார்வையில் நல்லவன் ஒருவனுமில்லை. பரிதாபம்! இன்று வாசித்த பகுதியில் குறுகிய இடைவெளியில் வந்து போன ஐந்து பொல்லாத ராஜாக்களைக் குறித்து பார்க்கிறோம். ஆறு மாதங்களே ஆட்சி செய்த சகரியா, யெகூவின் குடும்பத்தில் அவனுக்குப் பின் வந்த நான்காம் ராஜா. அந்த குடும்பத்தில் பிறந்தவன் என்பதைத் தவிர ராஜாவாகும் தகுதி ஒன்றும் அவனிடம் இல்லை. ஒரு மாதம் மாத்திரம் ராஜாவாயிருந்த சல்லூம் என்பவன், படுகுழியை வெட்டுகிறவன், தானே அதில் விழுவான் என்ற நீதிமொழியை உறுதிப்படுத்தும்படி மெனாகேம் என்பவனால் கொல்லப்பட்டான். மெனாகேம் என்ற ராஜாவும் அவனுக்குப் பின் வந்த பெக்காகியா என்ற ராஜாவும், அசீரியர்களை திருப்தி படுத்துவதிலேயே கவனம் செலுத்தினார்கள். அதற்குப் பின் வந்த பெக்கா ராஜாவின் நாட்களில் இஸ்ரவேலின் பல இடங்கள் அசீரியரால் கைப்பற்றப்பட்டு, இஸ்ரவேலரும் கைதிகளாகக் கொண்டு போகப்பட்டனர். இந்த ராஜாக்களைப் போல அர்த்தமற்ற, உபயோகமற்ற வாழ்கையை வாழாதபடி நாம் கவனமாயிருப்போமாக.                 

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்கு இந்த பூமியில் கொடுத்திருக்கும் நாளெல்லாம், வல்லமையாய் உமக்கு சேவை செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்.