காலைத் தியானம் – ஜூன் 27, 2020

2 இராஜா 15: 32 – 38                       

இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்        

இராஜாக்களின் புத்தகத்தில் யூதாவின் சரித்திரமும் இஸ்ரவேலின் சரித்திரமும் மாறி மாறி வருகின்றன. இப்போது மறுபடியும் யூதாவின் சரித்திரத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். யோதாம் ஒரு நல்ல அரசன். 2 நாளாகமம் 27ம் அதிகாரத்திலும் அவனைப் பற்றி வாசிக்கலாம். யோதாமும் தன் தகப்பனைப் போல யுத்தத்திலும், நாட்டைக் கட்டி எழுப்புவதிலும் வல்லவன். யோதாமின் குமாரனான ஆகாஸ் என்பவனோ சாத்தானுக்குச் சேவை செய்தவன்.  யூதாவின் சரித்திரத்தில் நல்ல அரசர்களும் பொல்லாத அரசர்களும் மாறி மாறி வருவதைப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் மத்தியில் கர்த்தர் தாவீதின் வம்ச விளக்கை அணையாமல் பாதுகாத்து வருகிறதைப் பார்க்கிறோம். இந்த நாட்களிலும் நாம் அடிக்கடி நம்மைச் சுற்றி, ஏன் திருச்சபைகளுக்குள்ளே கூட, அட்டூழியங்களைப் பார்க்கிறோம். நம்பிக்கையற்ற நிலையிலும் கர்த்தர் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார். உனக்கு அவருடைய சத்தம் கேட்கிறதா?                                        

ஜெபம்

ஆண்டவரே, இன்றைய சூழ்நிலையிலும் மீதியாயிருப்பவர்களில் உமக்கென்று வாழும் ஒருவனா(ளா)க என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.