காலைத் தியானம் – ஜூலை 01, 2020

2 இராஜா 17: 13- 17                           

தங்களை விற்றுப்போட்டார்கள்                   

இஸ்ரவேலர் செய்த குற்றங்களைக் கவனியுங்கள். முதலாவதாக தங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு (இரட்சித்து), காத்து, வழிநடத்தி வந்த கர்த்தரை மறந்தார்கள். மோசே மூலமாகக் கொடுக்கப்பட்ட கற்பனைகளையும், கட்டளைகளையும் அசட்டை பண்ணினார்கள்.  விக்கிரகங்களை வணங்கினார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளைக் கண்டுக்கொள்ளவேயில்லை.  தங்களுடைய கழுத்துக்களையும் இருதயத்தையும் கடினப் படுத்திக் கொண்டார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படி தங்களை விற்றுப் போட்டார்கள். எந்த வியாபாரத்திலும் இரண்டு நபர்கள் உண்டு.  ஒவ்வொருவரும் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெற்றுக் கொள்வதுதான் வியாபாரத்தின் நோக்கம். இஸ்ரவேலர் தான் விற்கிறவர்கள். சாத்தான் தான் வாங்குகிறவன்.  இஸ்ரவேலர் தங்கள் ஆத்துமாக்களை சாத்தானுக்கு விற்றுப் போட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்ததென்ன? நிலையில்லாத சில சிற்றின்பங்களும், அளவில்லாத பொய் வாக்குறுதிகளுமே! உன் தகப்பனை விட்டுவிட்டு சாத்தானின் பின் போகாதே. அப்படிப் போகிறவன்(ள்) பயங்கரமான பின் விளைவுகளைச் சந்திக்கவேண்டும்.                                                            

ஜெபம்

ஆண்டவரே, என் இருதயம் ஒருபோதும் கடினப்பட்டு விடாதபடி என்னை உடைத்து, புதிய மனிதனாக உருவாக்கிக் காத்துக் கொள்ளும். ஆமென்.