காலைத் தியானம் – ஜூலை 02, 2020

2 இராஜா 17: 18 – 24                              

அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்                   

இஸ்ரவேலரைத் தம்முடைய பிரசன்னத்தை விட்டு அகற்றினார் என்று பார்க்கிறோம். ஒரு தகப்பன் தன் மகனை அல்லது மகளைப் பார்த்து, நீ என்னை விட்டு விலகிப்போ; என் முகத்தின் முன் வராதே என்று சொல்ல நேரிட்டால், அப்படி சொல்லும்போது அந்த தகப்பனின் மனது எவ்வளவு வேதனைப்படும் என்பதையும் அப்படி சொல்ல வைத்த மனது எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும் என்பதையும் நாம் உணர முடிகிறதல்லவா? அப்படியென்றால் இஸ்ரவேலரைக் குறித்து கர்த்தருடைய மனது எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்!  கர்த்தருடைய பிரசன்னத்தில் இருப்பதும் விலகி ஓடுவதும் நம்முடைய முடிவு. இந்த பூலோக வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து, அவரால் இரட்சிக்கப்பட்டு, அவரை மாத்திரம் தொழுது கொண்டு, அவர் விரும்பும் பரிசுத்த பாதையில் நடக்க விருப்பமில்லாவிட்டால் பூலோக வாழ்க்கைக்குப் பின் எப்படி அவருடைய பிரசன்னத்தில் இருக்க முடியும்? அவர் இருக்கும் இடத்தில், அவர் நமக்கு ஆயத்தப்படுத்தியிருக்கும் இடத்தில், அவருடைய பிரசன்னத்தில் நித்திய காலமெல்லாம் இருப்பதுதானே பரலோகம்! பரிசுத்த பரலோகமா அல்லது கொடூரமான நரகமா என்பது உன்னுடைய முடிவைச் சார்ந்தது தான்.                                                                                    

ஜெபம்

ஆண்டவரே, இப்பூலோக வாழ்க்கையில் நான் இடுக்கமான, பரிசுத்த பாதையையே தெரிந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். உம்முடைய முகத்தை விட்டு ஒருபோதும் என்னை அகற்றாமல் இரும். ஆமென்.