2 இராஜா 17: 25 – 28
தேவனுடைய காரியத்தைப் போதிக்கக் கடவன்
இந்த பூமியும், மனிதர் உட்பட அதிலுள்ள அனைத்தும் கர்த்தருடையவைகள். இந்தியாவும், நீ வசிக்கும் மாநிலமும், ஊரும் கர்த்தருடையவைகள் தான். கர்த்தருடைய இடத்தில் அவரை அறியாத மக்கள் பிற தெய்வங்களை ஆராதிப்பதை அவர் விரும்பவில்லை. அசீரியாவின் ராஜாவோ, ஒவ்வொரு கடவுளுக்கும் பூமியில் ஒரு இடமும் (territory) எல்லையும் (boundary) உண்டென்றும், சமாரியாவின் கடவுளை ஆராதிக்கும் முறையை தன்னுடைய மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் நினைத்தான். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையின் மூலமாகக் கர்த்தருக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடப்பதைக் குறித்து மக்களுக்குப் போதிக்க ஒரு ஆசாரியன் அனுப்பப்படுகிறான். இன்றும் நீ கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க, பரலோக ராஜியத்தைக் குறித்துப் போதிக்க, நீ அனுபவிக்கும் இன்பத்தைப் பிறரோடு பகிர்ந்து கொள்ள, உனக்கு அநேகத் தருணங்களைக் கர்த்தர் உருவாக்கிக் கொடுக்கிறார். நீ அந்த தருணங்களை உபயோகப்படுத்தி விதைகளை விதைக்கிறாயா? அல்லது, இது என் வேலை இல்லை என்று சொல்லி ஒதுங்கிப் போய் விடுகிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, நீர் கொடுக்கும் தருணங்களிலெல்லாம் உம்முடைய நற்செய்தியை பிறரோடு பகிர்ந்துகொள்ளும் வாஞ்சையை எனக்குத் தாரும். ஆமென்.