காலைத் தியானம் – ஜூலை 04, 2020

2 இராஜா 17: 29 – 41                                

கர்த்தருக்குப் பயந்தும் . . .  தங்கள் தேவர்களைச் சேவித்தும்  வந்தார்கள்                    

மக்களாட்சி முறையில் எல்லா மதத்தினருக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும். கொடுக்கப்படுகிறது. நாம் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், எல்லா மதமும் ஒன்றுதான்; அவையெல்லாம் பரலோகத்துக்கு தான் மனிதனைக் கொண்டுபோய்விடுகின்றன என்று சொல்வது சரியல்ல. எந்த கடவுளை வேண்டுமானாலும் வணங்கலாம் என்று சொல்வதும் சரியல்ல. சமாரியாவில் குடியேற்றப்பட்ட மற்ற நாட்டினர் கர்த்தரைப் பற்றிய போதனையைக் கேட்டதும், கர்த்தரும் வேண்டும்; நாங்கள் இதுவரை ஆராதித்து வந்த எங்கள் தெய்வங்களும் வேண்டும் என்று சொல்லி புதிய வழிபாட்டு முறைகளை உருவாக்கினார்கள். இதைக் கர்த்தர் ஏற்றுக் கொள்வதில்லை. யோசுவா இஸ்ரவேலரைப் பார்த்து, நீங்கள் யாரைச் சேவிப்பீர்கள் – கர்த்தரையா அல்லது எமோரியரின் தெய்வங்களையா – என்பதை இன்று தெரிந்துகொள்ளுங்கள் என்று கேட்டதை யோசுவா 24: 14, 15 வசனங்களில் பார்க்கிறோம். எலியாவும் அதைக்குறித்து இஸ்ரவேலருடன் பேசும்போது, ”எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள்; கர்த்தரா அல்லது பாகாலா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார் (1 இராஜாக்கள் 18:21). இயேசுவும் வேண்டும், பாவ வாழ்க்கையும் வேண்டும் என்று வாழ முடியாது.

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்மோடு நெருங்கியிருக்கும் பரிசுத்த வாழ்க்கையையே தெரிந்து கொள்ளுகிறேன். இயேசு கிறிஸ்து வாழ்ந்து காட்டிய பாதையில் செல்ல பெலன் தாரும். ஆமென்.