காலைத் தியானம் – ஜூலை 05, 2020

2 இராஜா 18: 1 – 6                                

யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப் போல ஒருவனும் இருந்ததில்லை                   

மறுபடியும் நாம் இஸ்ரவேலின் சரித்திரத்திலிருந்து யூதாவின் சரித்திரத்திற்கு வருகிறோம். தாவீதின் வம்சத்தில் மறுபடியும் ஒரு தலைசிறந்த ராஜா எழும்புகிறதைப் பார்க்கிறோம். தாவீதும், சாலொமோனும் உடைபடாத இஸ்ரவேல் சாம்ராஜியத்தின் ராஜாக்கள். ராஜியம் உடைப்பட்டபின் யூதாவின் ராஜாக்கள் வரிசையில், ரெகொபெயாம் முதல் சிதேக்கியா வரை, 344 வருடங்களில் 20 ராஜாக்கள் அரசாண்டார்கள்.  அவர்கள் அனைவரிலும் எசேக்கியாவைப் போல சிறந்தவன், அதாவது கர்த்தருக்குப் பிரியமானவன் ஒருவனும் இல்லை என்று வேதாகமம் சொல்லுகிறது. எசேக்கியா விக்கிரகத் தோப்புகளையும், பிற தெய்வங்களை வழிபட உபயோகிக்கப்பட்ட மேடைகளையும் உடைத்தெறிந்தான். அவன் கர்த்தருடைய தேவாலயத்தைப் புதுப்பித்து, மோசேயின் கட்டளையின்படி ஆராதனை ஒழுக்கங்களை மறுபடியும் ஏற்படுத்தியதைக் குறித்த சரித்திரம் 2 நாளாகமம் 29, 30, 31ம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.  நீ கர்த்தருக்குப் பிரியமானவனா(ளா)க  வாழ்கிறாயா? உன் பரிசுத்த வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் மேடைகளை உடைத்தெறிந்து விட்டாயா?

ஜெபம்

ஆண்டவரே, என் தலைமுறையினருக்கும் எனக்குப் பின் வரும் தலைமுறையினருக்கும் என்னை ஒரு முன்மாதிரியாக எழுப்பியருளும். ஆமென்.