காலைத் தியானம் – ஜூலை 06, 2020

2 இராஜா 18: 7 – 12                               

அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று                 

முதலாவது தேவனுடைய ராஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்று இயேசு கிறிஸ்து சொன்னதை மத்தேயு 6: 33ல் பார்க்கிறோம். இவைகளெல்லாம் என்று இங்கு சொல்லப்படுவது, இந்த பூலோக வாழ்க்கைக்கு நமக்குத் தேவையானவைகளைக் குறிக்கிறது. கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதின் பிரதான நோக்கம் இந்த பூமியின் ஆசீர்வாதங்களைச் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல; தேவனுடைய ராஜியத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதுதான் பிரதான நோக்கம். கர்த்தரோ, தம்முடைய ராஜியத்தின் ஆசீர்வாதங்களை மாத்திரமல்ல, இந்த பூலோக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நமக்குத் தருகிறார்.  எசேக்கியா இதைத்தான் தன் வாழ்க்கையில் அனுபவித்தான். கர்த்தருக்கும் அவரை ஆராதிப்பதற்கும் அவன் முதலிடம் கொடுத்தான். பூமியில் அவன் சென்ற இடமெல்லாம் அவனுக்கு அனுகூலமாயிருந்தது. உன் வாழ்க்கையில் நீ செய்யும் காரியங்கள் பலவற்றில் தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றனவா? கர்த்தருக்கு உன் உள்ளம், உறவு, நேரம், பணம் எல்லாவற்றிலும் முதலிடம் கொடுக்கிறாயா?

ஜெபம்

ஆண்டவரே, நான் எல்லாவற்றிலும் உமக்கு முதலிடம் கொடுக்கத் தவறிவிடுகிறேன். என்னை மன்னியும்.  இனி வரும் நாட்களில் உமக்கே எப்பொழுதும் முதலிடம் கொடுக்க எனக்கு உதவிசெய்யும். ஆமென்.