காலைத் தியானம் – ஜூலை 08, 2020

2 இராஜா 18: 17 – 37 

எசேக்கியா . . . கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள்              

தன் சக்திக்கு மிஞ்சிய அளவு கப்பம் கட்டியவுடன் அசீரியாவின் ராஜா திருப்தியாகி போய்விடுவான் என்று எசேக்கியா நினைத்தான்.  அசீரியாவின் ராஜாவோ, எசேக்கியாவை மிரட்டி, யூதா மக்களையும் மிரட்டி, கர்த்தரின் பெயரை வீணாக உபயோகித்து, பொய் சொல்லி, யூதாவின் மீதிருந்த தன் பிடியை இறுக்குகிறான். எசேக்கியா முதலிலேயே கர்த்தரிடம் போயிருக்கவேண்டும். அசீரியாவின் ராஜாவுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது.  நாமும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலைவந்தாலும் முதலிலேயே கர்த்தரிடத்திற்குப் போகவேண்டும். நானே சுயமாய் சமாளித்துவிடுவேன் என்று நினைக்கக் கூடாது. அது மாத்திரமல்ல, எசேக்கியா அசீரியாவின் ராஜாவுக்கு இடம் கொடுத்ததைப் போல, நாமும் சாத்தானுக்கு ஒரு சிறிய இடம் கொடுத்தாலும் அவன் நம் தலையின் மேல் வந்து உட்கார்ந்துகொள்வான். மேலும் சாத்தான் நம்மைப் பார்த்து, பாவியாகிய நீ கர்த்தரிடத்திற்குப் போனால் அவர் உனக்கு பதில் கொடுக்கமாட்டார்; ஆகையால் கர்த்தரை நம்பவேண்டாம் என்று சொல்லுவான். சாத்தானுக்கு ஒரு இம்மியும் இடம் கொடுக்காதே. இப்பொழுதும் கர்த்தர் நம் சத்தத்தைக் கேட்க ஆவலாக இருக்கிறார்.

ஜெபம்

ஆண்டவரே, சாத்தானுடைய சூழ்ச்சிக்கும் பொய்களுக்கும் நான் பலியாகிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.