காலைத் தியானம் – ஜூலை 11, 2020

2 இராஜா 19: 20 – 28  

நானே அதைச் சம்பவிக்கப் பண்ணினேன்

அசீரியாவின் ராஜாவாகிய சனகெரிப் என்பவன் கர்த்தரை அறியாதவன். அவருக்கு விரோதமாகக் கொந்தளித்து, அவரைக் குறித்து இழிவாகப் பேசியவன்.  அவன் பல நாட்டு ராஜாக்களை முறியடித்து அவர்களுடைய அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கியவன். அதைக் குறித்து மிகவும் பெருமைப்பட்டு, கர்த்தர்கூட அவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நினைத்தவன். கர்த்தரோ, நான் தான் அப்படிப்பட்ட சம்பவங்களை நீ செய்யும்படி அனுமதித்தேன் என்று சொல்லுகிறார்.  கர்த்தர் உலகம் முழுவதற்கும் அதிபதி.  அவருடைய அனுமதி இல்லாமல் ஒரு தீங்கு கூட நடைபெறாது. யோபுவை சோதிக்க, அவனுடைய பூலோக ஆசீர்வாதங்களை எடுத்துப் போட சாத்தான் கர்த்தரிடம் அனுமதி கேட்டான். கர்த்தர் அனுமதித்த எல்லைக்குள் தான் சாத்தான் செயல்பட முடிந்தது.  கர்த்தர் இவ்வுலகில் தம்முடைய திட்டம் நிறைவேறும்படி தம் பிள்ளைகளை உபயோகிக்கிறார்.  கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகனையும் உபயோகிக்கிறார். அவரை வெறுத்து, அவருக்கு விரோதமாகப் பேசுகிற அல்லது செயல்படுகிற அயோக்கியனையும் அவர் உபயோகிக்கிறார். உன் கண்கள் எப்போதும் கர்த்தர் மீதே இருக்கட்டும்.

ஜெபம்

ஆண்டவரே, கோவிட்-19 என்னும் கொள்ளைநோய் கூட உம்முடைய அனுமதியில்லாமல் இவ்வுலகிற்கு வரவில்லை என்பதை விசுவாசிக்கிறேன். இந்த நாட்களில் எங்கள் குடும்பங்களிலும் எங்கள் திருச்சபைகளிலும் பெரிய எழுப்புதலை உருவாக்கும். ஆமென்.