காலைத் தியானம் – ஜூலை 12, 2020

2 இராஜா 19: 29 – 37  

மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்

உலக சரித்திரத்தில் மறுபடியும் மறுபடியும் கர்த்தர் தமக்காக   “மீந்திருக்கிறவர்களை” (remnant) வைத்திருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் சிலரையோ அல்லது பலரையோ கர்த்தர் தமக்காக ஒதுக்கி, தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார். கிறிஸ்துவை அறிந்தவர்கள் வாழ வாய்ப்பில்லை என்று நாம் நினைக்கும் ஈரான், ஈராக், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில்கூட கர்த்தர் தமக்கென்று மீந்திருக்கிறவர்களை வைத்திருக்கிறார். அப்படி அவர் வைத்திருக்கிற அவருடைய பிள்ளைகள் ஆழமான வேர்களோடு இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டிருந்தால் மாத்திரமே கனிகொடுக்க முடியும். நீ வேலை செய்கிற அலுவலகத்தில் அல்லது தொழில் செய்கிற இடத்தில் ஒருவேளை நீ கர்த்தரால் பாதுகாக்கப்பட்டிருக்கும் remnantஆக இருக்கலாம். ஒருவேளை கர்த்தரை அறியாத உன் உறவினர்கள் மத்தியில் கர்த்தருக்காக மீந்திருக்கிறவனா(ளா)க உன்னை அவர் வைத்திருக்கலாம். உன்னுடைய வேர் கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டு அவரில் நிலைத்திருக்கிறதா? கனிகொடுப்பதற்காகவே நீ உருவாக்கப்பட்டுள்ளாய்.  

ஜெபம்

ஆண்டவரே, என்னை உம்முடைய பிள்ளையாகப் பாதுகாத்து வைத்திருப்பதற்காக நன்றி. நான் எப்போதும் கனிதரும் மரமாக இருக்கும்படி என்னை ஆசீர்வதியும். ஆமென்.