காலைத் தியானம் – ஜூலை 14, 2020

2 இராஜா 20: 7 – 11    

சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும்

கர்த்தர் எசேக்கியாவை உடனேயே எழுந்து போக வைக்கவில்லை. மூன்றாம் நாளிலே அவன் எழுந்து ஆலயத்துக்குப் போவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கர்த்தர் சில சமயங்களில் உடனேயே பூரண சுகத்தைக் கொடுத்துவிடுகிறார். சில சமயங்களில் காலம் தாமதித்தே பூரண சுகம் கொடுக்கிறார். உன் வாழ்க்கையில் ஒருவேளை கர்த்தர் காலம் தாமதித்தால், கர்த்தாவே நான் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று சித்தமயிருக்கிறீர் என்று அவரைக் கேட்டு தெரிந்து கொள். எசேக்கியா மூன்றாம் நாளிலே பூரண சுகம் பெறுவான் என்று கர்த்தர் சொன்னதற்கு அவரிடமிருந்து ஒரு அடையாளத்தைக் கேட்கிறான். சாயை, பாகை என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அவை இன்று நாம் சாதாரணமாக உபயோகிக்கும் வார்த்தைகள் இல்லை. சாயை என்றால் நிழல் என்று பொருள். பாகை என்றால் நாம் நடக்கும்போது எடுத்துவைக்கும் அடி (step) என்பது பொருள். வெயிலில் ஒரு கொடிக்கம்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மத்தியானத்தில் அந்த கம்பத்திற்கு நிழல் இருக்காது. சூரியன் கீழே செல்ல செல்ல, நிழல் பெரியதாகிக்கொண்டே போகும். அப்படிப்பட்ட நிழல், நேரம் செல்ல செல்ல பத்து அடிகள் பின் நோக்கி வரவேண்டும் என்பதே அந்த அடையாளம். அடையாளங்கள் மனிதரின் விசுவாசத்தை உறுதிப்படுத்துகின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால் அடையாளங்கள் இல்லாமலேயே கர்த்தரை விசுவாசிக்கிறவன்(ள்) ஆசீர்வதிக்கப்பட்டவன்(ள்).

ஜெபம்

ஆண்டவரே, அடையாளங்கள் இல்லாமலேயே உம்மை விசுவாசிக்கும் உறுதியை எனக்குத் தாரும். ஆமென்.