காலைத் தியானம் – ஜூலை 15, 2020

2 இராஜா 20: 12 – 21    

எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்

பெருமை எசேக்கியாவைவிட்டு நீங்கவில்லை. இன்றும் பெருமை பல கிறிஸ்தவர்களிடம் சாதாரணமாகக் காணப்படும் ஒரு பாவம். நாம் அதை ஒரு பாவம் என்றே உணர்வதில்லை.  பெருமை என்னும் பாவத்திலிருந்துதான் மற்றெல்லா பாவங்களும் தோன்றுகின்றன என்று William Barclay என்னும் பக்தன் சொல்லுகிறார். “Pride is the ground in which all the other sins grow, and the parent from which all other sins come.”  இன்று நாம், குடும்பத்தைக் குறித்த பெருமை, முன்னோர்களைக் குறித்த பெருமை, பக்தியைக் குறித்த பெருமை, பணத்தையும் செல்வத்தையும் குறித்த பெருமை, நான் பிரபலமானவன்(ள்) என்னும் பெருமை, கர்த்தர் கொடுத்திருக்கும் தாலந்துகளைக் குறித்த பெருமை என்று பலவிதமான பெருமைகளால் பாவம்செய்து கொண்டேயிருக்கிறோம். எசேக்கியா தன்னிடமிருந்த செல்வங்களையும் ஆயுதங்களையும் அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் பெருமையாக பாபிலோனிலிருந்து வந்த விருந்தினர்களுக்குக் காண்பித்தான். அவர்களோ யூதாவின் வல்லமையை எடைபோட வந்த ஒற்றர்கள் என்பதை அவன் உணரவில்லை. எசேக்கியாவின் அச்செயல், பல வருடங்களுக்குப் பின் யூதாவின் ராஜியம் பாபிலோனியரால் கைப்பற்றப்படுவதற்கு வழி உருவாக்கியது.

ஜெபம்

ஆண்டவரே, பெருமையை என்னிடமிருந்து முற்றிலும் அகற்றும். தாழ்மையைக் கற்றுத் தாரும். ஆமென்.