காலைத் தியானம் – ஜூலை 16, 2020

2 இராஜா 21: 1 – 9    

வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி

மனாசே வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான் என்று பார்க்கிறோம். நம் நாட்டில் இன்றும் சூரியனை வணங்குவதும், இயற்கையை வணங்குவதும் நடைமுறையில் இருக்கின்றது. படைத்தவரை விட படைப்புகளை வணங்குகிறவர்கள் அதிகம்பேர் இருக்கிறார்கள். கர்த்தர் என்ற பெயருக்குப் பதிலாக “இயற்கை” என்ற சொல்லை உபயோகிப்பது இன்று நாகரீகமாகவே கருதப்படுகிறது. இன்று வாசித்த வேதாகமப் பகுதியில், மனாசே தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப் போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எழுப்பி, எருசலேம் ஆலயத்திலேயே தோப்புவிக்கிரகத்தை ஏற்படுத்தினான் என்பதையும் பார்க்கிறோம். எசேக்கியா தன் வாழ்நாளெல்லாம் கர்த்தரைத் தவிர வேறே தேவன் இல்லை என்பதில் உறுதியாயிருந்தான். அவனுக்குப் பெருமை இருந்தது. அவ்வப்போது சுயபெலனையும் மற்ற மனிதரையும் நம்பி செயல்படும் தவறான மனநிலை இருந்தது. ஆனால் ஒருபோதும் கர்த்தரைத் தவிர வேறே தெய்வங்களை வணங்கவில்லை. அப்படிப்பட்ட தகப்பனுக்கு மகனாகப் பிறந்த மனாசே, எப்படி இப்படியொரு வாழ்க்கையை வாழ முடிந்தது? அந்த கேள்விக்கு நமக்குப் பதில் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு பேராபத்தைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்பது நமக்குத் தெரியும். பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே நாம் அவர்களுக்காக ஜெபிக்கவேண்டும்.  பிள்ளை வளர்ந்து வரும்போது ஒருநாளும் கர்த்தரைவிட்டு விலகி விடக்கூடாது என்று ஜெபிக்கவேண்டும்.

ஜெபம்

ஆண்டவரே, தாயின் வயிற்றில் உருவாகும் நேரம் முதல் என் பிள்ளைகளையும் அவர்களுக்குப் பின் வரும் சந்ததியையும் உம்மை விட்டு விலகாதபடி வேலியடைத்து காத்துக் கொள்ளும். ஆமென்.