காலைத் தியானம் – ஜூலை 18, 2020

2 இராஜா 21: 19 – 26       

யோசியாவை ராஜாவாக்கினார்கள்      

அந்த நாட்களில் பாபிலோன் அசீரியாவின் இரண்டாம் தலைநகராகத் திகழ்ந்தது.  2 நாளாகமம் 33ம் அதிகாரத்தில், மனாசே அசீரியரால் கைதியாகப் பிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டதையும், மனாசே மனந்திருப்பியதையும், மறுபடியும் திரும்பவந்து எருசலேமிலும் யூதாவின் பட்டணங்களிலும் சீர்த்திருத்தங்களைச் செய்ய எடுத்த முயற்சிகளையும் குறித்து வாசிக்கலாம். அப்படிப்பட்ட நிலையிலும், மனாசே தன்னுடைய மகனான ஆமோனின் மனதிலே ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை.  ஆமோன் தன் தகப்பனுடைய வழியில் பொல்லாப்பைச் செய்து தன் ஊழியராலேயே கொல்லப்படுகிறான். பொதுவாக ஒரு ராஜா கொல்லப்பட்டால், கொன்றவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் வழக்கம். அப்படி ஆமோனைக் கொன்றவர்கள் ஆட்சியைப் பிடிக்குமுன் மக்கள் அவர்களைக் கொன்றுவிட்டு ஆமோனின் குமாரனான யோசியாவை ராஜாவாக்கினார்கள். யூதாவின் அரசாட்சி  தாவீதின் வம்சத்தை விட்டு விலகுவதில்லை என்று கர்த்தர் கொடுத்த வாக்குறுதி மறுபடியும் நிறைவேறுகிறது.                      

ஜெபம்

ஆண்டவரே, என்றும் மாறாத உம்முடைய வார்த்தைகளுக்காகவும் வாக்குத்தத்தங்களுக்காகவும் நன்றி சுவாமி. ஆமென்.