காலைத் தியானம் – ஜூலை 19, 2020

2 இராஜா 22: 1 – 7      

அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை            

மறுபடியும் யூதாவில் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும் ஒரு ராஜாவைப் பார்க்கிறோம். யோசியா கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலையை ஆரம்பிக்கிறான். பிறதெய்வங்களை வழிபடாமல் இருந்தால் மாத்திரம் போதாது. கர்த்தரை ஆராதிக்கவேண்டும். அவரை சரியான முறையில் ஆராதிப்பதற்கு வேண்டியவைகளை யோசியா செய்கிறான். ஆலயத்தைப் பழுது பார்க்கிற செலவைக் கையாளுகிறவர்கள் உண்மையானவர்களான படியால் அவர்களிடத்தில் கணக்குக் கேட்கவேண்டியதில்லை என்று யோசியா என்ன பின்னணியில் சொன்னான் என்பது நமக்குத் தெரியாது. இந்த வசனத்தைச் சுட்டிக்காட்டி, திருச்சபைகளிலும், ஊழியங்களிலும் நான் கர்த்தருக்குதான் கணக்குக் கொடுக்க வேண்டும், வேறே யாருக்கும் கணக்குக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல முடியாது. அது தவறு. பவுல் அப்போஸ்தலன், 2 கொரிந்தியர் 8: 20, 21ம் வசனங்களில் சொல்லுவதை வாசியுங்கள். “எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக் குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.”  இதுதான் நாம் கடைப்பிடிக்கவேண்டிய கட்டுப்பாடு.                     

ஜெபம்

ஆண்டவரே, பணம் பொருள் ஆகியவற்றைக் கையாளுவதில் நாட்டின் சட்டங்களையும், மனிதரின் நியாயமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.