காலைத் தியானம் – ஜூலை 24, 2020

2 இராஜா 23: 4 – 25               

தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும்

இயேசு கிறிஸ்து சொன்ன முதலாம் பிரதான கற்பனையை (மத்தேயு 22: 37, 38) அப்படியே கைக்கொண்ட வன் என்று வேதாகமத்திலேயே யோசியா ராஜா நற்சான்றிதழ் பெற்றிருக்கிறான். ஆம், யோசியாவின் அர்ப்பணிப்பு அப்படிப்பட்டதாயிருந்தது. அவன் தன் அப்பா, தாத்தா ஆகியோர் செய்த பாவங்களின் அடிச்சுவடுகளை முற்றிலுமாக அழித்தான். அது மாத்திரமல்ல, சாலொமோன் ராஜா முன்னூறு வருடங்களுக்கு முன்னதாகத் தன் வெளிநாட்டு மனைவிகளை மகிழ்விக்கும்படி சீதோனியர், மோவாபியர், அம்மோன் புத்திரர் ஆகியோரின் தெய்வங்களுக்காக கட்டியிருந்த மேடைகளையும் அழித்துப் போட்டான் (வசனம் 13). யோசியா தன் முழு இருதயத்தோடு மாத்திரமல்ல, தன் முழு பலத்தோடும் செயல்பட்டதைக் காண்கிறோம். உன் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்துவரும் தகர்க்கப்படவேண்டிய மேடைகள் ஏதாவது உண்டா? ஒருவேளை உனக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களுக்கு அவைகள் தடையாக இருக்கலாம்.               

ஜெபம்

ஆண்டவரே, நான் தகர்க்கவேண்டிய மேடைகள் ஏதாவது இருந்தால் அவற்றை எனக்கு வெளிப்படுத்தும். அவைகளை அழித்துப் போடவேண்டிய மன உறுதியை எனக்குத் தாரும். ஆமென்.