காலைத் தியானம் – ஜூலை 26, 2020

2 இராஜா 23: 31 – 37               

எலியாக்கீமை ராஜாவாக வைத்து     

எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலரைக் கர்த்தர் தம் வல்லமையை விளங்கப்பண்ணி, அவர்களை மீட்டு, வனாந்தரத்தில் வழி நடத்தி, கானான் தேசத்திற்கு அழைத்துவந்தார்.  நியாயாதிபதிகளின் காலத்திற்குப் பின் வந்த இஸ்ரவேலரின் ராஜாக்கள் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட காலம் மாறி, இப்போது எகிப்தின் பார்வோன் யூதாவில் ராஜாவை நியமிக்கும் காலம் வந்துவிட்டது. இப்படிப்பட்ட அவல நிலைக்குக் காரணம் இஸ்ரவேலரின் கொடிய பாவங்களே. கர்த்தரின் வல்லமையையும் அற்புதங்களையும் அனுதினமும் அனுபவித்து, அவருடன் நெருங்கி வாழும் பாக்கியத்தைப் பெற்ற அவருடைய பிள்ளைகள் அவரைப் புறக்கணித்து கொடிய பாவ வாழ்க்கை வாழ்ந்தது தான் நாட்டின் பரிதாபமான நிலைக்குக் காரணம். இன்றும் கிறிஸ்தவன் என்று இயேசு கிறிஸ்துவின் பெயரைத் தரித்துக் கொண்டு, ஆலயத்திலும் நாட்டிலும் அட்டூழியங்களைச் செய்துவரும் மனிதர்தான் நம்முடைய நாட்டின் பரிதாபமான ஊழல் நிறைந்த நிலைக்குக் காரணமோ? இது நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கவேண்டிய காலம்.  கிறிஸ்துவை அறிந்த குடும்பங்களுக்குள்ளும் திருச்சபைகளுக்குள்ளும் ஆவிக்குரிய எழுப்புதலுக்காக நாம் ஜெபிக்கவேண்டிய நேரம்.                              

ஜெபம்

ஆண்டவரே, என் குடும்பத்திலும் எங்கள் திருச்சபையிலும் ஒரு பெரிய எழுப்புதலைத் தாரும். ஆமென்.