காலைத் தியானம் – ஜூலை 29, 2020

2 இராஜா 25: 1 – 12                 

தேசத்தில் ஏழையான சிலரை . . . விட்டிருந்தான்      

பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சார் யூதா நாட்டைத் தன் அரசாட்சிக்குக் கீழே கொண்டுவருவதற்கு உபயோகித்த யுக்தியைக் கவனியுங்கள். தேசத்தின் பிரதானிகளையும், பராக்கிரமசாலிகளையும், திறமையுள்ளவர்களையும் (skilled workers) பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோய் விட்டான். அந்த விதத்தில்தான் தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும்கூட கொண்டுபோகப்பட்டனர் (தானியேல் 1: 1- 4). ஏழைகளை நேபுகாத்நேச்சார் விட்டுச் சென்றதற்குக் காரணங்கள் சில உண்டு. அவர்கள் அற்பமானவர்கள் என்றும் அவர்களைவைத்து பாபிலோனில் எதுவும் சாதிக்கமுடியாது என்றும் அவன் நினைத்திருக்கவேண்டும். மேலும் அவர்கள் ஏழைகளானபடியால் தூரத்தில் இருந்துகொண்டே அவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும் என்றும் அவன் நினைத்திருக்கவேண்டும். இன்று நம் திருச்சபைகளில்கூட ஏழைகளை அற்பமாக நடத்துகிறோமோ? கர்த்தரின் இருதயத்தில் ஏழைகளுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.    

ஜெபம்

ஆண்டவரே, ஏழைகளை ஒருபோதும் அற்பமாக எண்ணாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.