1 நாளா 2: 1- 55
தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான்

வம்ச வரலாறு தொடர்கிறது. இஸ்ரவேலின் 12 குமாரர், போவாஸ், ஈசாய், தாவீது என்று வேதாகமத்தில் மற்ற பகுதிகளில் நாம் வாசித்திருக்கும் பலருடைய பெயர்கள் இந்த அதிகாரத்தில் இடம் பெறுகின்றன. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 12:3) என்று கர்த்தர் ஆபிரகாமிடம் சொன்னது, ஆபிரகாமின் வம்சத்தில்தான் உலகை இரட்சிக்கும் மேசியா தோன்றுவார் என்பதின் முன்னறிவிப்பு. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் (ஏசாயா 11:1) என்பது இயேசு கிறிஸ்து ஈசாயின் வம்சத்தில் தோன்றுவார் என்பதைக் குறித்த தீர்க்கதரிசனம். மேலும், தாவீதுக்கு ஒர் நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன் என்று எரேமியா 23:5ல் சொல்லப்படிருப்பது இயேசு தாவீதின் வம்சத்தில் தோன்றுவார் என்பதைக் குறிக்கின்றது. இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாவற்றையும் இணைப்பது போல இன்று வாசித்த பகுதியின் வம்ச வரலாறு அமைகிறது.
ஜெபம்
ஆண்டவரே, வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் சத்தியம் என்று விசுவாசிக்கிறேன். இயேசுவே, உம்முடைய இரண்டாம் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆமென்.