காலைத் தியானம் – ஆகஸ்ட் 04, 2020

1 நாளா 3: 1- 24                      

தாவீதுக்குப் பிறந்த குமாரர்           

தாவீது, சாலொமோன், அவர்களுக்குப் பின் வந்து யூதாவை அரசாண்ட சந்ததியர் என்று நாம் ஏற்கனவே வாசித்து அறிந்துள்ள பெயர்கள் சிலவற்றை இந்த அதிகாரத்தில் பார்க்கிறோம். அதே சமயம் நாம் கேள்விப்படாத பெயர்கள் பல இந்த அதிகாரத்தில் மாத்திரமல்ல, வேதாகமத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆம், நமக்கு அவை முக்கியமில்லாத வெறும் பெயர்கள் தான். ஆனால் நம் கர்த்தருக்கு ஒவ்வொன்றும் முக்கியமான ஒருவரின் பெயர். இன்று உலகில் 780 கோடி மக்கள் வாழ்கிறார்கள். எத்தனையோ கோடி மக்கள் பூலோக வாழ்க்கையை முடித்து விட்டு மறுமைக்குள் போய்விட்டார்கள். இருந்தாலும் கர்த்தருக்கு உன்னையும் தனிப்பட்ட முறையில் தெரியும். உன்னையும் தன் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். உன் தலையிலிருக்கும் ஒவ்வொரு முடியும் அவருக்குத் தெரியும் என்று வேதம் சொல்லுகிறது.        

ஜெபம்

ஆண்டவரே, கோடிக்கணக்கான மனிதரின் மத்தியில் என்னையும் தெரிந்து வைத்துக்கொண்டு, நேசித்து வழி நடத்துகிறீர். உமக்கு நன்றி சொல்வதற்கு எனக்கு ஆயிரம் நாவுகள் இருந்தாலும் அது போதாது. ஆமென்.