காலைத் தியானம் – ஆகஸ்ட் 05, 2020

1 நாளா 4: 1- 43                      

என் எல்லையைப் பெரிதாக்கி           

மறுபடியும் பெயர்களின் பட்டியல் போய்க்கொண்டே இருக்கிறது. பல பெயர்களின் மத்தியில் திடீரென்று யாபேஸ் என்னும் ஒருவனைப் பற்றி இரண்டு வசனங்களில் (வ 9,10) விசேஷமான குறிப்புகள் சில கொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம்பெற்றவனாக இருந்தானாம்!  அதாவது அந்த நாட்களில் வாழ்ந்த தன் சகோதரர் எல்லாரைப் பார்க்கிலும் அவன் கர்த்தருக்குப் பிரியமானவனாக வாழ்ந்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உன்னைக் குறித்தும் கர்த்தர் அப்படி சொல்வாரா? மேலும் யாபேஸ் ஜெபத்தில் வேண்டிக் கொண்டதைக் கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார் என்று பார்க்கிறோம்.  கர்த்தர் தன் எல்லையைப் பெரிதாக்கவேண்டும் என்பது அவன் கேட்டுக் கொண்ட ஜெபத்தின் ஒரு பகுதி. இந்த ஜெபத்தை மேற்கோள் காட்டி, ஆண்டவரே என் வியாபாரத்தைப் பெரிதாக்கும்; எனக்கு இன்னும் சில வீடுகள், கார்கள், நிலம் போன்ற ஆசீர்வாதங்களைத் தாரும் என்று ஜெபிப்பவர்கள் அநேகர் உண்டு.  இப்படி உன் எல்லைப் பெரிதாவதால் யாருக்கு என்ன பயன்? நீ கர்த்தருக்கும் மற்ற மனிதருக்கும் பயன்படும் வகையில் உன் எல்லைப் பெரிதாகும்படி ஜெபம் செய். கர்த்தர் அந்த ஜெபத்தின்படி உனக்குப் பதிலளிப்பார்.   

ஜெபம்

ஆண்டவரே, நான் இன்னும் அநேகருக்கு உம்முடைய இரட்சிப்பின் நற்செய்தியை அறிவிக்கும்படி என் எல்லையைப் பெரிதாக்கும். ஆமென்.