எஸ்றா 2: 42- 70
வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் . . . .
நாம் ஏற்கனவே பார்த்தபடி ஒரு யூதன் தன் வம்ச வரலாற்றை ஆபிரகாம் வரை கொண்டுசெல்ல முடியாவிட்டால், அவன் யூதன் என்று ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான். இந்த அதிகாரம் முழுவதும் பாபிலோனிலிருந்து திரும்பிய யூதர்களின் பட்டியலும், அவர்களோடே வந்த யூதரல்லாத மற்றவர்களின் பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக 65ம் வசனத்தில், யூதர்களைத் தவிர வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் 7337 பேர் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது பாபிலோனுக்குக் கைதிகளாகச் சென்ற யூதர்களில் பலர் எப்படி செல்வந்தர்களாகிவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும் இந்த 65ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 200 பாடகர்கள் லேவியர் அல்ல. அவர்கள் ஆலய வழிபாட்டுக்கு உதவுகிறவர்கள் அல்ல. அவர்கள் திருமணம் போன்ற சமுதாய கொண்டாட்டங்களிலே பாடுகிற secular singers. ஒருவன் யூதன் என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமானால் அவன் பெயர் வம்ச அட்டவணையில் இடம்பெற வேண்டும். அதே போல ஒருவன் பரலோகத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அவன் பெயர் கர்த்தருடைய ஜீவ புத்தகத்தில் இடம்பெற வேண்டும். நான் கிறிஸ்தவன் என்று சொல்வதாலோ அல்லது இயேசுவின் நாமத்தில் அற்புதங்களைச் செய்தேன் என்று சொல்வதாலோ பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியாது (மத்தேயு 7: 21-23) (வெளி 21: 27).
ஜெபம்
ஆண்டவரே, நான் தகுதியற்ற பாவி. நீரே என்னைத் தயவாய் மன்னித்து, கழுவி, சுத்தமாக்கி என் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதும்படி கெஞ்சுகிறேன். நன்றி சுவாமி. ஆமென்.