எஸ்றா 3: 12- 13
மகா சத்தமிட்டு அழுதார்கள்
இளைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். சாலொமோன் கட்டின முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதியவர்களோ மகா சத்தமாய் அழுதார்கள். மகிழ்ச்சியடைய வேண்டிய நேரத்தில் முதியவர்கள் பழைய நாட்களை நினைத்து அழுதார்கள் (Good old days!). பழைய காலத்து நினைவுகளும் அனுபவங்களும் எல்லாரையும் நிகழ் காலத்தில் வழிநடத்தும் உபகரணமாக (rudderஆக) இருக்கவேண்டும். முன்னே செல்லவிடாமல், கடந்த காலத்திலேயே நிலைத்திருக்கும்படி செய்யும் நங்கூரமாக இருக்கக் கூடாது. இன்றும் நம்முடைய திருச்சபைகளில் முதியவர்களும் இளைஞர்களும் வெவேறு திசைகளிலே இழுத்துக் கொண்டு நிற்கிறதைப் பார்க்கிறோம் அல்லவா? முதியவர்களுக்குப் பாரம்பரிய பாடல்கள்தான் வேண்டும்; இளைஞர்களுக்கோ நவீன ஆராதனைப் பாடல்கள்தான் வேண்டும்! இரண்டில் ஒன்று என்பது சரியான முடிவல்ல. ஒருவருக்கொருவர் அனுசரித்துக் கொண்டு எப்படி சமநிலையைக் கடைப்பிடிப்பது என்பதுதான் முக்கியம். இன்றைய பாரம்பரியப் பாடல்கள் ஒரு காலத்தில் நவீனப் பாடல்களாக இருந்தன என்பதை முதியவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். பாரம்பரியப் பாடல்களில் உள்ள கருத்துக்களின் ஆழத்தையும் உண்மையையும் இளைஞர்கள் உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கவேண்டும். முதியவர்களும் இளைஞர்களும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, ஒற்றுமையுடனும் மனத்தாழ்மையுடனும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
ஜெபம்
ஆண்டவரே, என் ஆலயத்தில் இளைஞர்களும் முதியவர்களும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையோடு உம்மை ஆராதிக்கும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.