எஸ்றா 4: 7- 24
தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது
சாத்தான் தந்திரத்தால் சாதிக்கமுடியாததை தொந்தரவு கொடுத்து, மிரட்டி சாதிக்க முயன்றான். அதுவும் நடக்கவில்லை என்றவுடன் அந்த நாட்களில் மிகப்பெரிய ராஜாவாக இருந்த அர்தசஷ்டா ராஜாவுக்கு ஒரு மனு கொடுத்து ஆலயம் கட்டும் வேலையை நிறுத்திவிட்டான். கோரேஸ் ராஜாவுக்கு கர்த்தருடன் இருந்த உறவு, அவனுக்குப் பின் வந்த அகாஸ்வேரு, அர்தசஷ்டா போன்ற ராஜாக்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. அது ஒரு பக்கம். மறு பக்கத்தில், யூதர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு பூமியில் எந்த ராஜாவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு, ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான கர்த்தரிடத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமை இருந்தது. அதே சமயம் பதில் கிடைக்காத கேள்விகள் பல அவர்கள் உள்ளத்தில் இருந்திருக்கும்! கர்த்தருடைய உத்தரவின் படியும் வழிநடத்துதலின்படியும் ஆரம்பித்த ஆலயத்தைக் கட்டும் வேலை ஏன் தடைபட்டது? கர்த்தர் ஏன் அதை அனுமதித்தார்? உன் வாழ்க்கையிலும் இப்படி பதில் கிடைக்காத கேள்விகள் உண்டோ? கர்த்தரிடத்தில் மேல்முறையீடு செய்துவிட்டு அவருடைய வேளைக்காகக் காத்திரு.
ஜெபம்
ஆண்டவரே, என் வாழ்க்கையிலும் அநேகக் காரியங்களுக்கு எனக்கு விளக்கம் தெரியாது. ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் நீர் என்னோடிருக்கிறீர் என்பது எனக்குத் தெரியும். என்னைப் பிடித்துள்ள பிடியை நீர் விட்டுவிடாதேயும். ஆமென்.