காலைத் தியானம் – ஆகஸ்ட் 16, 2020

எஸ்றா 5: 6- 17

இந்த ஆலயத்தைக் கட்ட . . .  உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார்?

எருசலேம் இன்னும் பாபிலோனியரின் அரசாட்சியின் கீழ்தான் இருந்தது. எருசலேமில் இந்த ஆலயத்தைக் கட்ட உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று தேசாதிபதி ஒருவனும் அவனைச் சார்ந்தவர்களும் கேட்கிறார்கள். 3ம் வசனத்தில் நாம் வாசித்த இந்த கேள்விக்கான பதில் 11ம் வசனத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ”நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியார்”  என்பது இஸ்ரவேலரின் பதில். அப்படிப்பட்ட தேவனுடைய உத்தரவின்படி கோரேஸ் ராஜா செயல்பட்டதையும் அவர்கள் சொல்லுகிறார்கள். நாம், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் அடியார் என்று எல்லா சூழ்நிலைகளிலும் சொல்ல தயாராக இருக்கிறோமா?  அது எளிதாக இல்லாவிட்டாலும் நாம் அப்படிச் சொல்லத் தயங்கக் கூடாது. நம்முடைய உயர் அதிகாரிகளை அல்லது வேறு சிலரைப் புண்படுத்திவிடுவோமோ என்ற தயக்கம் நம்மைப் பின் வாங்கச் செய்யக்கூடாது.  நீ யார் என்பது உன் வார்த்தைகள் மூலமாகவும் உன் செயல்கள் மூலமாகவும் மற்றவர்களுக்குத் தெரியுமா?

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்முடைய பிள்ளை என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்க ஒருபோதும் தயங்காத மனதை எனக்குத் தாரும். ஆமென்.