காலைத் தியானம் – ஆகஸ்ட் 19, 2020

எஸ்றா 7: 1- 6

கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால்

ஆறாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களுக்கும் ஏழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகள் கடந்தபின்தான் எஸ்றா பாபிலோனிலிருந்து எருசலேமுக்குச் செல்கிறார். அவருடன் அநேக யூதர்களையும் அவர் அழைத்துச் சென்றார். அதுவரை பாபிலோனில் நடந்தவைகளையெல்லாம் எழுதும்படி அவர் அங்கேயே இருந்திருக்கலாம். கர்த்தருடைய கரம் அவர்மேல் இருந்ததால் அவர் கேட்டதையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தார். எஸ்றா வேதத்தைப் போதிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவராகவும் ஆசீர்வதிக்கப் பட்டவராகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கை அன்றைய யூதருக்கும் யூதரல்லாதவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தது. உன்னுடைய வாழ்க்கையைக் குறித்தும் அப்படிப்பட்ட சாட்சி உண்டா?

ஜெபம்

ஆண்டவரே, எஸ்றாவோடு இருந்தது போல உம்முடைய கரம் என் மீதும் இருக்கட்டும். ஆமென்.

குறிப்பு:

பாபிலோன் சிறையிருப்பு 70 வருட காலம். வேத ஆராய்ச்சியாளர்கள் இதை இரண்டு விதமாகக் கணக்கிடுகிறார்கள். 1) சிறையிருப்பு ஆரம்பித்த வருடத்திலிருந்து (கிமு 606), செருபாபேலுடன் இஸ்ரவேலரின் முதல் குழு எருசலேமுக்குத் திரும்பி வந்த வருடம் (கிமு 536) வரையுள்ள 70 ஆண்டுகள். 2) சிறையிருப்பு முற்றிலுமாக முடிந்த வருடத்திலிருந்து (கிமு586) எருசலேம் ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட வருடம் (கிமு 516) வரையுள்ள 70 வருடங்கள்.             எஸ்றாவுடன் இஸ்ரவேலரின் இரண்டாம் குழு எருசலேமுக்குத் திரும்பி வந்த வருடம் கிமு 458. நெகேமியாவுடன் இஸ்ரவேலரின் மூன்றாம் குழு எருசலேமுக்குத் திரும்பி வந்த வருடம் கிமு 445.