எஸ்றா 7: 11- 28
பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாது
ஆசாரியருக்கும், லேவியருக்கும், பாடகருக்கும், ஆலய வாசல் காவலாளருக்கும் மற்றெல்லா ஆலய பணிவிடைக்காரருக்கும் எந்தவிதமான வரியும் கிடையாது என்பது ராஜாவின் உத்தரவு. மனிதனின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களுக்கு எந்தவிதமான உலகப்பொருள் சம்பந்தப்பட்ட கவலைகளும் இருக்ககூடாது என்பதே இந்த கட்டளையின் நோக்கம். இன்று பூலோகப் பொருட்களை அல்லது தேவைகளைக் குறித்து கவலைப் படாத ஊழியர்கள் ஒரு சிலரே. ஊழியர்களின் பணம் மற்றும் பொருட்தேவைகளை நான் தாங்குவேன் என்று நினைக்கும் விசுவாசிகளும் சிலரே. எனக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும்; ஆனால் கிறிஸ்தவ ஊழியர்கள் மாதம் 5000 ரூபாய் வருமானத்தில் தியாகத்தோடு வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தானே அதிகம். உண்மையோடும் உத்தமமாகவும் உழைக்கும் ஊழியரைத் தாங்குவது உன் கடமை. அது உன் சபைப் போதகராக இருக்கலாம்; தண்ணீர்கூட இல்லாத காட்டுப் பகுதிகளில் உழைக்கும் மிஷனரியாக இருக்கலாம்; அல்லது பெரிய நிறுவனங்களின் உதவியில்லாமல் தனியாக வேலை செய்யும் பிரசங்கியாராகவும் இருக்கலாம்.
ஜெபம்
ஆண்டவரே, உதவி தேவைப்படும் ஊழியர்களைத் தெரிந்து கொள்ளவும் அவர்களைத் தாங்கவும் வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.