காலைத் தியானம் – ஆகஸ்ட் 31, 2020

நெகே 2: 7- 10   

தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால்

நெகேமியா முதலாவதாக எருசலேம் சென்று அதின் மதில்களைக் கட்டும்படி ராஜாவிடம் அனுமதி கேட்கிறார். ராஜா அனுமதிக்கிறார். அதற்குப் பின் தான் ஆரம்பிக்கப் போகும் பிரமாண்டமான வேலைக்கு வேண்டிய மரங்களையும், எருசலேமுக்குப் போவதற்குத் தேவையான பாதுகாப்பையும் கேட்கிறார். அதுவும் கிடைக்கிறது. நாம் நெகேமியாவின் இடத்தில் இருந்திருந்தால் ராஜாவை எப்படியெல்லாம் புகழ்ந்திருப்போம்! நெகேமியாவோ, தேவனுடைய தயவுள்ள கரத்தைக் குறித்துப் பேசுகிறார். அதுதான் “தேவனுக்கே மகிமை உண்டாவதாக” என்பதின் பொருள். நெகேமியா நிச்சயமாக ராஜாவுக்கு நன்றி சொல்லியிருப்பார். ஆனால் ராஜாவின் செயல் நெகேமியாவுக்குக் கர்த்தரை மறைக்கவில்லை. உன் உயர் அதிகாரிகளிடமிருந்து உனக்கு தயவு கிடைக்கும்போது நீ என்ன நினைக்கிறாய்? என்ன சொல்லுகிறாய்? உனக்கு வியாதியிலிருந்து சுகம் கிடைக்கும்போது நன்றியுள்ள உன் மனதுக்கு முன் முதலில் வருவது கர்த்தரா அல்லது உன் மருத்துவரா?

ஜெபம்

ஆண்டவரே, உம் தயவினால் மாத்திரமே நான் இவ்வுலகில் நன்மைகள் அனைத்தையும் பெறுகிறேன். உம் தயவை என்றும் மறவாத மனதை எனக்குத் தாரும். ஆமென்.