காலைத் தியானம் – செப்டம்பர் 02, 2020

நெகே 2: 17 – 20   

எழுந்து கட்டுவோம் வாருங்கள்

இது நெகேமியாவின் அழைப்புக்கு யூதர்கள் கொடுத்த மறுமொழி. தனி ஒருவனாக திட்டம் தீட்டிய நெகேமியா, தனிமையில் செயல்பட முயற்சிக்கவில்லை. யூதர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குழுவாகச் செயல்படுவதிலுள்ள பலனை அவர் அறிந்திருந்தார். இன்று தனி மனிதரின் வாழ்க்கையிலும், குடும்பங்களிலும், திருச்சபைகளிலும், நமது நாட்டிலும் புதுப்பித்துக் கட்டப்பட வேண்டியவைகள் ஏராளம் உண்டு. வாழ்க்கையைச் சரிசெய்வோம் வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கும் கிறிஸ்துவை அறிந்த தலைவர்கள் நமக்குத் தேவை. எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று தோள் கொடுக்கும் சபை மக்களும் இன்று தேவை. எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று யூதர்கள் குரல் கொடுத்தவுடன், கர்த்தர் நெகேமியாவுக்குக் கொடுத்த திட்டம் யூத மக்களின் திட்டமாக மாறிவிட்டது. இன்று தனிமையில் செயல்படும் திருச்சபைத் தலைவர்களுக்கும், கிறிஸ்தவ நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இது ஒரு சவால். சபைப் பிரிவினை இல்லாமல் விசுவாசிகள் எல்லாரும் சேர்ந்து நம் நாட்டை எழுந்து கட்டுவதற்குக் கரங்களைச் சேர்ப்போமாக.

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் நாட்டைக் கட்டுவதற்கு சேர்ந்து உழைக்கும் மன உறுதியைத் தாரும். ஆமென்.