காலைத் தியானம் – செப்டம்பர் 04, 2020

நெகே 3: 15 – 32      

அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்

எருசலேமைச் சுற்றி ஆட்டு வாசல், மீன் வாசல், பழைய வாசல், குப்பைமேட்டு வாசல், ஊருணி வாசல், குதிரை வாசல் போன்று பல வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு வாசலுக்கும் ஒரு குறிப்பிட்ட உபயோகம் இருந்தது. ஆட்டு வாசல் வழியாக தேவாலயத்தில் பலியிடும்படி ஆடுகள் கொண்டுவரப்பட்டன என்பதை நேற்று பார்த்தோம். மீன் வாசல் வழியாக தீரு, கலிலேயா போன்ற இடங்களிலிருந்து மீன்கள் வியாபாரத்துக்காகக் கொண்டுவரப்பட்டன. குப்பைமேட்டு வாசல் வழியாக நகரத்தின் குப்பைகளும் கழிவுகளும் வெளியே கொண்டு போகப்பட்டன. இப்படியாக இந்த பெரிய பட்டணத்தின் அலங்கமும் வாசல்களும் பாதுகாப்புக்காக மாத்திரமல்லாமல் வியாபாரத்துக்காகவும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்காகவும் உபயோகிக்கப்பட்டன. அனைத்தையும் சரி செய்து கட்டியெழுப்புவது நிச்சயமாக மலை போன்ற ஒரு வேலைதான். நெகேமியா அவ்வேலையை எவ்வளவு நேர்த்தியாகப் பிரித்துக் கொடுத்தார் என்பது நம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம். அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருந்த பகுதியைப் பழுது பார்த்துக் கட்டியதில் நாட்டு நலனும் சொந்த நலனும் இணைந்துவிட்டன. நெகேமியாவின் ஞானத்தைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

ஜெபம்

ஆண்டவரே, பொறுப்புகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் நெகேமியாவுக்கு இருந்ததைப் போன்ற ஞானத்தை எனக்கும் தாரும். ஆமென்.