காலைத் தியானம் – செப்டம்பர் 08, 2020

நெகே 5: 1- 5       

தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று

கர்த்தருக்காக நீ செய்யும் எந்த வேலையும் ஒரு எளிதான, அமைதியான பாதையில் செல்வதில்லை என்பதை மறுபடியும் பார்க்கிறோம். எதிர்ப்புகள் வெளியே இருந்து வரலாம். அல்லது குழப்பங்கள் உள்ளேயே உருவாகலாம். நெகேமியாவுக்கு இப்போது யூதர்களுக்குள் இருந்தே குழப்பம் வந்துவிட்டது. பாபிலோனில் பணக்காரராகி தங்கள் செல்வங்களை எருசலேமுக்குக் கொண்டுவந்தவர்கள் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். மேலும் பல வருடங்களுக்கு முன் செருபாபேல் காலத்தில் எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களின் சந்ததியாரும் இந்த பிரச்சனைக்குக் காரணமாயிருந்திருக்கக் கூடும். அவர்களும் வியாபாரத்தின் மூலமாக நாளடைவில் செல்வந்தர்களாகியிருந்தார்கள். இந்த பணக்கார யூதர்கள் வசதியில்லாத யூதர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர்களுடைய நிலங்களை அபகரித்தும், பிள்ளைகளை அடிமைப்படுத்தியும் அநியாயம் செய்தார்கள். வேதாகமத்தின் பல இடங்களில் கர்த்தர் ஏழைகள் மீது வைத்திருக்கும் அன்பையும் கரிசனையையும் குறித்து வாசிக்கிறோம். இருந்தாலும் ஒவ்வொரு தலைமுறையிலும் ஏழைகளையும், பண வசதி குறைந்தவர்களையும் ஒடுக்குகிறவர்கள் இருக்கிறார்கள். நீ பண வசதி குறைந்தவர்களை எப்படி நடத்துகிறாய்?

ஜெபம்

ஆண்டவரே, ஏழைகளை அறியாமல்கூட ஒடுக்கிவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.