காலைத் தியானம் – செப்டம்பர் 12, 2020

நெகே 6: 9 – 14 

என் தேவனே, தோபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்த செய்கைகளுக்குத் தக்கதாக. . .  நினைத்துக்கொள்ளும்.

மீண்டும் ஒரு சூழ்ச்சி. அதுவும் நடக்கவில்லை. இவ்வளவு எதிர்ப்புகளிலிருந்தும் சூழ்ச்சிகளிலிருந்தும் நெகேமியா தப்பித்தது அவருடைய சொந்த அறிவினால் அல்ல. நிச்சயமாக அது கர்த்தர் கொடுத்த ஞானமே. ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட ஆபத்துக்களைச் சந்திக்கும்போதும் நெகேமியா தன் ஆண்டவரிடம் ஜெபிப்பதைக் கவனியுங்கள். அவர் தம் எதிரிகள் அழிக்கப்படவேண்டும் என்று ஜெபிக்கவில்லை. என் தேவனே, அவர்கள் செய்யும் அநியாய செயல்களை நினைவில் கொள்ளும் என்று மாத்திரம் ஜெபம் செய்தார். என்ன செய்ய வேண்டும் என்பது தேவனுக்குத் தெரியும். அவர் அப்படிப்பட்டவர்களை மனந்திரும்பச் செய்யலாம் அல்லது அவர்களைத் தண்டிக்கலாம் அல்லது ஒன்றும் உடனே செய்யாமல் கால அவகாசம் கொடுக்கலாம். உன் வாழ்க்கையிலும், உன் எதிரிகள் உனக்கு விரோதமாக அநியாயமானதைச் செய்தால், அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது உன் ஆண்டவருக்குத் தெரியும்.

ஜெபம்

ஆண்டவரே, நான் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளையும், என்னை அநியாயமாய் எதிர்க்கிறவர்களையும் என்ன செய்யவேண்டும் என்பது உமக்குத் தெரியும். நீரே பொறுப்பேற்றுக் கொள்ளும். ஆமென்.