காலைத் தியானம் – செப்டம்பர் 13, 2020

நெகே 6: 15- 19         

அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு முடிந்தது

எதிரிகள், உங்களால் முடியாது என்றார்கள். வேலை மிகவும் பெரியது என்றார்கள். ஒரு வகையில் பார்த்தால் எதிரிகள் சொன்னது சரிதான். கர்த்தருடைய உதவியில்லாமல் நெகேமியாவால் அலங்கத்தைக் கட்டி முடித்திருக்க முடியாது. நெகேமியா சொன்னது போல, “இந்தக் கிரியை தேவனால் கைகூடி வந்ததென்று” அவர்களுடைய எதிரிகளும், சுற்றியிருந்த யூதரல்லாதவர்களும் அறிந்துகொண்டார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் அனைவரும், ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து செயல்பட்டால், கர்த்தருடைய உதவியோடு பெரிய காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அவ்வளவு பெரிய பட்டணத்தைச் சுற்றியுள்ள அலங்கத்தை ஐம்பத்திரண்டே நாட்களில் கட்டி முடித்தார்கள். இன்றைய நவீன தொழில் நுட்பங்களை வைத்துக் கூட அது சாத்தியமா என்பது தெரியவில்லை. எதிரிகள் உங்களால் முடியாது என்றார்கள். நெகேமியாவும் அவரோடிருந்தவர்களும், கர்த்தரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

ஜெபம்

ஆண்டவரே, உம்மோடு சேர்ந்து உம்முடைய வேலையைச் செய்யும் போது, பெரிய சாதனைகளைச் செய்யமுடியும் என்பதை மறுபடியும் ஞாபகப் படுத்தியதற்காக நன்றி சுவாமி. ஆமென்.