நெகே 7: 4 – 73
பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது… ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள்
அலங்கம் கட்டும் வேலை முடிந்துவிட்டது. ஆனால் எல்லா வேலையும் முடியவில்லை! பெரிய பட்டணத்தில் ஜனத்தொகை கொஞ்சமாக இருந்தது. அலங்க வேலை முடிந்தவுடன் எருசலேமின் பழைய மகிமை பலருக்கும் நினைவுக்கு வரும். யூதரல்லாத பலரும் எருசலேமுக்கு வந்து குடியேற முயற்சிக்கலாம். யூதர்களுக்கு அப்படி மற்றவர்கள் வருவதில் அதிக விருப்பம் இருந்திருக்க முடியாது. அதேசமயம் எருசலேமைப் பாதுகாக்கவும், அதை வியாபார ரீதியில் முன்னேற்றவும் மக்கள் தேவை. இந்த பிரச்சனையைத் தீர்க்க நெகேமியாவுக்கு ஒரு யோசனைத் தோன்றுகிறது. அந்த யோசனை கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்கிறார் அவர். நெகேமியா, எருசலேமுக்கு முந்தி வந்தவர்களின் அட்டவணையைப் பார்த்து, யார் யார் எருசலேமைச் சார்ந்தவர்கள் என்பதைக் கணக்கிடுகிறார். யூதர்களின் வம்ச வரலாறு, வம்ச அட்டவணை ஆகியவற்றின் அடிப்படையில் யார் இப்போது எருசலேமை நிரப்பவேண்டும் என்பது நெகேமியாவுக்குத் தெளிவாகிவிட்டது. உன் யோசனைகள் – சிறியவைகளாக இருந்தாலும் பெரியவைகளாக இருந்தாலும், கர்த்தர் கொடுத்த யோசனைகளாக இருந்தால் அவை உனக்கும் மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.
ஜெபம்
ஆண்டவரே, எனக்குத் தேவைப்படும்போதெல்லாம், உம்முடைய யோசனைகளைத் தந்து என்னை ஆசீர்வதியும். ஆமென்.