காலைத் தியானம் – செப்டம்பர் 16, 2020

நெகே 8: 1 – 5            

காலமே தொடங்கி மத்தியானமட்டும் வாசித்தான். சகல ஜனங்களும் கவனமாய்ச் செவி கொடுத்தார்கள் 

எஸ்றாவைக் குறித்து நெகேமியாவின் புத்தகத்தில் இதுதான் முதல்முறை பார்க்கிறோம். எஸ்றாவும் நெகேமியாவும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். நெகேமியா ஒரு அரசாங்கத் தலைவன். எஸ்றாவோ ஒரு ஆன்மீகத்தலைவன்; வேதபாரகன். வேதபாரகர்கள் அதிக படிப்பறிவு உள்ளவர்கள். மக்களுக்குப் போதனை செய்பவர்கள்; ஆலோசனைக் கொடுப்பவர்கள். மக்களிடையே அதிக மரியாதையும் மதிப்பும் உடையவர்கள். இன்று நம் கையில் வேத புத்தகம் இருப்பது போல, அந்த நாட்களில் கர்த்தருடைய வார்த்தை ஒவ்வொருவரிடமும் இருக்கவில்லை. எஸ்றா போன்ற வேதபாரகரிடம் மோசேயின் நியாயப்பிரமாண புத்தகச் சுருள் இருந்தது. கர்த்தருடைய வார்த்தையாகிய நியாயப்பிரமாணத்தை எஸ்றா வாசிக்கும்போது மக்கள் அனைவரும் கவனமாகக் கேட்டார்கள். அதுவும் காலை முதல் மத்தியானம் வரை வாசித்த போதிலும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்கு அவர்களுக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை. கர்த்தருடைய வார்த்தையை வாசித்து தியானிப்பதற்கு உனக்கும் அந்த ஆர்வம் உண்டா?

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய வார்த்தையின் இனிமையை சுவைத்து அனுபவிக்கும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.