காலைத் தியானம் – செப்டம்பர் 19, 2020

நெகே 9: 1 – 6              

பாவ அறிக்கை பண்ணி . . . கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள் 

நாம் பாவி என்பதை ஒவ்வொருவரும் நம் உள் மனதில் உணருகிறோம். நம் மனசாட்சி அதை சுட்டிக் காட்டுகிறது. இருந்தாலும் நாம் கர்த்தருடைய வார்த்தையை வாசித்து அதிலே தியானித்திருக்கும்போதுதான் எந்த அளவுக்கு நாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை என்பதை உணருகிறோம். ஆகையால் கர்த்தருடைய வசனத்தை ஒழுங்காக வாசித்து அதை ஆழமாகப் படிக்கவேண்டும். நாம் பாவம் என்று உணராமலேயே செய்த பாவத்தையெல்லாம் கர்த்தர் நமக்கு உணர்த்துவார். அவை அனைத்தும் கர்த்தருக்கு விரோதமாக செய்யப் பட்ட பாவங்களானபடியால் கர்த்தரிடம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் ஒருவருக்கே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு. சுத்திகரிக்கப்பட்ட பின்னரே முழு மனதுடன் நாம் கர்த்தரைப் பணிந்து, துதித்து அவருக்கு ஆராதனை செய்யமுடியும். இன்று ஒரு சில துதிப்பாடல்களை சத்தமாக, தாளத்துடன், கைதட்டி பாடிவிட்டால் கர்த்தரை நன்றாக துதித்துவிட்டோம் என்று நினைக்கிறவர்கள் அநேகர் உண்டு. கர்த்தர் நம் உள்ளத்தைப் பார்க்கிறார். நாம் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை எதுவென்று ரோமர் 12:1ஐ வாசித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஜெபம்

ஆண்டவரே, என் சரீரத்தை ஜீவ பலியாக ஏற்றுக்கொள்ளும். ஆமென்.