காலைத் தியானம் – செப்டம்பர் 21, 2020

நெகே 9: 22 – 31              

செல்வமாய் வாழ்ந்தார்கள் . . . பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்

இஸ்ரவேல் மக்கள் கர்த்தரிடமிருந்து பெற்றிருந்த நன்மைகளைக் குறித்து 25ம் வசனத்தில் வாசிக்கிறோம். இப்படிப்பட்ட வசனங்களைச் சுட்டிக் காட்டி அநேகர் இன்று, கர்த்தருடைய பிள்ளைகள் அனைவரும் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிப்பதே அவருடைய சித்தம் என்று பிரசங்கித்து விடுகிறார்கள். ஆனால், இஸ்ரவேலரின் சரித்திரத்தில் மாத்திரமல்லாமல், இன்றைய நாட்களிலும் செல்வமும் செழிப்பும் அநேகரைப் பாவத்திற்கு வழிநடத்துவதைப் பார்க்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால், நாம் செல்வத்தில் வாழ்கிறோமா அல்லது தரித்திரத்தில் வாழ்கிறோமா என்பது கர்த்தருக்கு முக்கியமல்ல. நம்முடைய இருதயம் கர்த்தருக்குப் பிரியமானதில் நிலைத்திருக்கிறதா என்பதே அவருக்கு முக்கியம். நீதிமொழிகள் 30: 8-9 வசனங்களை வாசியுங்கள். நன்றாக யோசித்தபின் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் மாத்திரம் கீழ்க்கண்ட ஜெபத்தை ஏறெடுங்கள்.                    

ஜெபம்

ஆண்டவரே, தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. ஆமென்.