காலைத் தியானம் – செப்டம்பர் 25, 2020

நெகே 11: 1 – 36                   

பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்தில்… குடியிருக்கப்பண்ண சீட்டுகளைப் போட்டார்கள்     

பழைய நாட்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, எருசலேமில் இருந்த யூதர்களின் எண்ணிக்கை மிகவும் கொஞ்சமாக இருந்தது. எருசலேமுக்கு வெளியே இருந்த இஸ்ரவேலருக்கோ எருசலேமுக்கு வர மனதில்லை. ஆகையால் யார் எருசலேமுக்குக் கட்டாயமாக வரவேண்டும் என்பதை முடிவு பண்ண சீட்டு போடப்படுகிறது. கர்த்தருடைய நகரம், ஆசீர்வதிக்கப்பட்ட நகரம், பரிசுத்த நகரம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எருசலேமுக்கு வர யூதர்களுக்கு ஏன் மனதில்லை? வேத நிபுணர்கள் சில காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். முதலாவதாக, எருசலேமுக்குள் வந்துவிட்டால் யூதரல்லாதவர்களால் வியாபாரத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம் இருந்தது. இரண்டாவதாக, எருசலேமுக்கு வந்தால் வீடு முதல் வியாபாரம் வரை எல்லாவற்றையும் திரும்ப ஆரம்பித்திலிருந்து நிலைநாட்ட வேண்டும். இதற்கு அதிக பணமும் நேரமும் தேவைப்படும். மூன்றாவதாக, எருசலேமில் வசித்தால், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதற்கு அநேகக் கோட்பாடுகள் இருக்கும் என்றும் தயங்கினார்கள். கர்த்தருடைய நகரத்திற்குச் செல்ல இஸ்ரவேலருக்குப் பணமும், வியாபாரமும், வாழ்க்கை சொகுசுகளும், சிற்றின்பங்களும் தடையாக இருந்தன. நீ எந்த அடிப்படையில் உன் முடிவுகளை எடுக்கிறாய் என்பதை சிந்தித்துப் பார்.

ஜெபம்

ஆண்டவரே, அநித்தியமானவைகளின் அடிப்படையில் நான் தீர்மானங்கள் எடுக்காதபடி எனக்கு ஞானம் தாரும். ஆமென்.