காலைத் தியானம் – செப்டம்பர் 26, 2020

நெகே 12: 1 – 23                  

லேவியர் யாரென்றால் . . .  ஆசாரியர்கள் யாரென்றால் . . .    

நெகேமியா, லேவியர் யார், ஆசாரியர்கள் யார், பொக்கிஷ அறைகளைக் காவல் காக்கிறவர்கள் யார் என்பதை நியமித்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தினார். லேவியருக்கும் ஆசாரியர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இஸ்ரவேல் மக்கள் பலவிதமான பலி ஆராதனைகளை ஏறெடுப்பதற்கு ஆசாரியர்கள் உதவினார்கள். ஆசாரியர்கள் மட்டுமே தேவாலயத்தின் மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசித்தார்கள். லேவியர்கள் நியாயப்பிரமாணங்களைப் போதிப்பதிலும், ஆசாரியர்களுக்கு உதவி செய்வதிலும், மற்ற ஆவிக்குரிய வளர்ச்சியைப் பேணுவதிலும் செயல்பட்டார்கள். லேவியர் வம்சத்தில் வந்தவர்களே ஆசாரியர்களாக இருந்தார்கள். எனவே எல்லா ஆசாரியர்களும் லேவியராக இருந்தார்கள். ஆனால் எல்லா லேவியரும் ஆசாரியர் அல்ல. அது ஒருபக்கம் இருக்கட்டும். நெகேமியா ஏற்படுத்திய ஒழுங்கை கவனியுங்கள். அப்படிப்பட்ட ஒழுங்கை நம்முடைய திருச்சபையில் மாத்திரமல்ல, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் கூட நாம் கடைப்பிடிப்போமாக. 

ஜெபம்

ஆண்டவரே, யார் எங்கே எப்போது எதைச் செய்ய வேண்டும் என்னும் ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்