காலைத் தியானம் – செப்டம்பர் 28, 2020

நெகே 12: 43 – 47                    

எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது    

நெகேமியா அழுது, துக்கித்து, உபவாசித்து மன்றாடிய நாட்களைக் குறித்து முதல் அதிகாரத்தில் வாசித்தோம். இப்போது கர்த்தரைத் துதித்து களிகூரும் நாட்களைக் குறித்து வாசிக்கிறோம். நாம் கர்த்தருடைய வசனத்தில் நிலைத்திருந்து நம்முடைய பாவ வழிகளிலிருந்து மனந்திரும்பி கர்த்தர் காட்டும் பாதையில் நடந்தால், எல்லாவற்றையும் செய்துமுடிக்க அவர் பெலன் தருவார் என்பதற்கு நெகேமியாவின் சரித்திரம் ஒரு எடுத்துக்காட்டு.  பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் 4:13ல் சொல்வதை விசுவாசிக்கிறாயா? கர்த்தருக்காகவும், மக்களின் பொது நலனுக்காகவும் பெரிய காரியங்களைச் செய்ய நாம் முன்வர வேண்டும். நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்கிறவர்களின் வாழ்க்கை மூலமாகக் கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. நெகேமியாவும் இஸ்ரவேல் மக்களும் அலங்கத்தைக் கட்டி முடித்ததைக் கொண்டாடும்போது காணிக்கை கொண்டுவந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் கொடுத்த காணிக்கை (பொக்கிஷங்கள், முதற்கனிகள், தசம பாகம் போன்றவைகள்) ஆலயத்தை நிரப்பியது. அதை நிர்வகிக்க மட்டும் சில மனிதர்கள் தேவைப்பட்டார்கள். ஆண்டவர் உனக்குச் செய்த நன்மைகளை எப்படி கொண்டாடுகிறாய்?

ஜெபம்

ஆண்டவரே, நான் உமக்காகவும் மக்களின் பொது நலனுக்காகவும் பெரிய காரியங்களைச் செய்யும்படி என்னை உபயோகியும். அதற்கு வேண்டிய மன தைரியத்தையும் விசுவாசத்தையும் என்னில் உறுதிப்படுத்தும். ஆமென்.