நெகே 13: 10 – 14
அப்பொழுது யூதர் எல்லாரும் . . தசம பாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டு வந்தார்கள்
12ம் 13ம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கும் காரியங்களைச் சிந்தித்துப் பாருங்கள். அலங்கம் கட்டி முடிக்கப்படுகிறது. மக்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆசாரியர்கள், லேவியர், பட்டணத்தைக் காக்கிறவர்கள், காணிக்கைகளை நிர்வகிக்கும் விசாரணைக்காரர், பாடகர் போன்ற அனைவரும் நியமிக்கப்படுகிறார்கள். எல்லாரிடமும் மகிழ்ச்சியும், நன்றியுள்ள இருதயமும், கர்த்தரைப் போற்றும் உள்ளமும் காணப்படுகிறது. நெகேமியா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (எவ்வளவு நாட்கள் என்று சொல்லப்படவில்லை) பாபிலோன் சென்று விடுகிறார். எல்லாம் தலை கீழாக மாறி விடுகிறது. தொபியாவுக்கு தேவனுடைய ஆலயப்பிரகாரங்களில் தங்குவதற்கு ஒரு அறை கொடுக்கப்படுகிறது. தசம பாகம் நின்றுவிட்டது. லேவியரும் பாடகரும் வேறு இடங்களுக்குப் போய்விடுகிறார்கள். நெகேமியா திரும்பி வந்தவுடன் மனவேதனையுடனும், உறுதியுடனும், கண்டிப்புடனும் எல்லாவற்றையும் சரிசெய்கிறார். தலைவனைப் பொறுத்தே மக்களின் வாழ்க்கை இருப்பதை சரித்திரம் முழுவதும் நாம் பார்க்கிறோம். இன்று கர்த்தருடைய சத்ததுக்கு செவிகொடுத்து, திறமையுடன் செயல்படும் போதகர்கள் இருக்கும் சபைகள் புத்துயிருடன் வளர்கின்றன. மற்ற சபைகள் தூங்குகின்றன. கிறிஸ்தவ நிறுவனங்களிலும், ஏன் தொழில் நிறுவனங்களிலும் கூட தலைவனைப் பொறுத்துதான் நிறுவனத்தின் சிறப்பு இருப்பதை நாம் காண்கிறோம். திருச்சபைக்கும், கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் நல்ல தலைவர்கள் அநேகர் தேவை. அதற்காக ஜெபியுங்கள்.
ஜெபம்
ஆண்டவரே, எங்கள் மத்தியில் நெகேமியாவைப் போன்ற தலைவர்களை எழுப்பும். ஆமென்.