காலைத் தியானம் – அக்டோபர் 03, 2020

நெகே 13: 23 – 31                   

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா?   

இன்று வாசித்த பகுதியில், நெகேமியா இஸ்ரவேலரிடம் காணப்பட்ட மற்றொரு மீறுதலைக் கண்டிக்கிறார். கர்த்தர் தடை செய்தவர்களைத் திருமணம் செய்திருந்த இஸ்ரவேலரைக் கடுமையாகக் கண்டிக்கிறார். சாலொமோன் ராஜாவைப் போன்ற ஞானி உலகத்தில் வேறே ஒருவன் இருந்ததில்லை. அவருடைய ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நாளடைவில் கர்த்தரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்ட ஞானத்தை தனக்குப் பொக்கிஷங்களைச் சேர்ப்பதற்கும், புகழைத் தேடவும், மனைவிகளைச் சேர்ப்பதற்கும் உபயோகித்துவிட்டார். சாலொமோன் ராஜா செய்தாலும் தவறு தவறுதான் என்பதை நெகேமியா சுட்டிக்காட்டுகிறார். மேலும் முன்னோர்கள் செய்த பாவங்கள் நமக்குப் பாடமாக இருக்கவேண்டும் என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார். நாம் நம்முடைய முன்னோர்கள் அல்லது வேதாகமத்தில் பார்க்கும் கர்த்தருடைய மனிதர்கள் செய்த பாவங்களைச் சுட்டிக்காட்டி அவனே இதைச் செய்தால் நான் ஏன் செய்யக்கூடாது என்று நினைக்கக் கூடாது. அப்பாவங்கள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் சுத்திகரித்துக்கொள்வோமாக.

ஜெபம்

ஆண்டவரே, என் முன்னோர்கள் செய்த பாவங்களை நானும் செய்துவிடாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.