காலைத் தியானம் – அக்டோபர் 04, 2020

எஸ்தர் 1: 1 – 9                   

தன் ராஜ்யத்தின் ஐசுவரியத்தையும் தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் விளங்கச் செய்துகொண்டிருந்தான்   

எஸ்தர் புத்தகத்தில் நாம் வாசிக்கும் சரித்திரம் கி.மு. 483ம் ஆண்டு – அதாவது நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலரை (யூதா, பென்யமீன் கோத்திரத்தாரை) சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டுபோனதிலிருந்து 103 ஆண்டுகள் கடந்தபின் ஆரம்பிக்கிறது. பாபிலோனின் வீழ்ச்சிக்குப் பின் பெர்சியா ராஜாக்களின் அரசாட்சி அன்றைய உலகின் பெரும்பகுதிகளில் மிகவும் சிறந்து விளங்கியது. அகாஸ்வேரு ராஜா இந்தியா முதல் எத்தியோப்பியா வரையுள்ள 127 நாடுகளை அரசாண்டு வந்தான். அவனுடைய குளிர்கால அரண்மனை சூசானில் இருந்தது. நாம் இன்று வாசித்த பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் ஆறு மாத கூத்தாட்டம் ஏன் நடந்தது? அகாஸ்வேரு ராஜா தன்னுடைய பெருமை, புகழ், மகத்துவம் மற்றும் செல்வத்தைப் பற்றிய செய்தி உலகெங்கும் பேசப்படவேண்டும் என்று விரும்பினான். அது சரி, உன் வீடு, வாகனம் போன்றவைகள் உன்னுடைய வசதிக்காகவும், உன்னைச் சார்ந்தவர்களின் வசதிக்காகவும் இருக்கின்றனவா அல்லது உன் வசதியைக் குறித்து எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இருக்கின்றனவா? நீ எவற்றையெல்லாம் facebookல் வெளியிட்டு பெருமைப் படுகிறாய் என்பதைக் குறித்து சிந்தித்துப்பார்.ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் பணத்தை எப்படி செலவழிக்கிறாய்? உன் தேவைக்காகவா அல்லது உன் பெருமைக்காகவா?

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்தையும் செல்வத்தையும் உபயோகிக்க வேண்டிய ஞானத்தை எனக்குத் தாரும். ஆமென்.