காலைத் தியானம் – அக்டோபர் 05, 2020

எஸ்தர் 1: 10 – 22                    

எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள்   

இன்று வாசித்த பகுதியிலுள்ள சரித்திரத்தை வாசித்தவுடன் அகாஸ்வேரு ராஜா செய்தது முற்றிலும் சரியே என்று நினைக்கிறவர்கள் எத்தனை பேர்? மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்த புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள் என்று பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 5:22ல் சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி, ராணியாகிய வஸ்தி செய்தது தவறு என்று சொல்லும் ஆண்கள் நம்மில் எத்தனை பேர்? அகாஸ்வேரு ராஜா தன்னுடைய 7 பிரதானிகள் மூலமாக தன்னுடைய ராணியை அழைக்கிறான். அதுவும் ராணியின் அழகை எல்லாருக்கும் காண்பிப்பதற்காகவே அவள் அழைக்கப்படுகிறாள். அவள் வரவில்லை என்றவுடன், ஏன் வரவில்லை என்றுகூட ராஜா கேட்கவில்லை. வஸ்தியிடம் நேராகப் பேசவுமில்லை. பிரதானிகளைக் கலந்தாலோசித்து அவர்கள் மூலமாகவே தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதைப் போல மனைவியை அடிமையாக நடத்துகிற ஆண்கள் நம்மில் எத்தனை பேர்? நீ உன் மனைவியிடம் சொல்வதை அவள் உனக்குச் சொல்வதற்கும், நீ அவளிடம் எதிர்பார்ப்பதை அவள் உன்னிடம் எதிர்பார்ப்பதற்கும் உன் குடும்பத்தில் இடம் இருந்தால், ஒருவருக்கொருவர் கனமும் மரியாதையும் (respect) இருக்கும். சட்டத்தின் மூலமாக மரியாதையை உருவாக்க முடியாது.        

ஜெபம்

ஆண்டவரே, என் குடும்பத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும், ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்தவும் உதவி செய்யும். ஆமென்.