காலைத் தியானம் – அக்டோபர் 09, 2020

எஸ்தர் 2: 21 – 23                            

இது ராஜ சமுகத்திலே நாளாகமப் புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது               

ராஜாவின் அரண்மனையிலே வேலை செய்யும் இரண்டு பிரதானிகள் ராஜாவைக் கொல்ல வகை தேடினார்கள். மொர்தெகாய் எஸ்தர் மூலமாக அதை ராஜாவுக்குத் தெரிவித்து ராஜாவைக் காப்பாற்றுகிறான். தன் உயிரே மொர்தெகாய் மூலமாகத்தான் காப்பாற்றப்பட்டது என்பது ராஜாவுக்குத் தெரியும். மொர்தெகாயுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை. பொருள் ஆதாயமும் கிடைக்கவில்லை. அவனுடைய பெயர் ராஜசமுகத்திலே நாளாகமப் புத்தகத்திலே (சரித்திரப் புத்தகத்திலே) எழுதப்படுகிறது.  இவ்வுலகில் நாம் செய்யும் பல நற்காரியங்களுக்கும் ஊழியத்துக்கும் பதவி உயர்வு கிடைக்காமலிருக்கலாம். கிடைக்கவேண்டிய பொருள் ஆதாயம்கூட கிடைக்காமல் இருக்கலாம். அதைக் குறித்து கவலைப்படாதே. ராஜாதி ராஜாவின் முன்னிலையில் உன் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படுகிறது. அது மாத்திரம் போதும்.              

ஜெபம்

ஆண்டவரே, இவ்வுலகில் எனக்குக் கிடைக்க வேண்டிய சன்மானம் கிடைக்கவில்லையே என்று நான் வருத்தப்பட்ட  நாட்கள் உண்டு. நீர் எல்லாவற்றையும் குறித்துவைத்திருப்பதற்காக நன்றி சுவாமி. உம்முடைய சன்மானம் மாத்திரம் எனக்குப் போதும்.  ஆமென்.