காலைத் தியானம் – அக்டோபர் 13, 2020

எஸ்தர் 4: 9 – 17                              

நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால்            

எஸ்தர், அகாஸ்வேரு ராஜாவிடம் போய் முறையிடவேண்டும் என்பது மொர்தெகாயின் விருப்பம். எஸ்தருடைய நிலை எளிதானதல்ல. அழைக்கப்படாமல் ராஜாவிடம் சென்றால், அவள் சாக நேரிடும். அதே சமயம் எதற்காக ராஜாவிடம் செல்ல முற்பட்டாளோ அதுவும் நிறைவேறாது. ஆகையால் ராஜாவிடம் நேரில் சென்று முறையிடுவதுதான் சரியான செயலா என்பது எஸ்தர் மனதிலுள்ள குழப்பம். மொர்தெகாயின் பதில் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஒரு பாடம். நீ மவுனமாயிருந்தால் கர்த்தருடைய திட்டம் நின்று போகாது! நீ சுவிசேஷத்தை அறிவிக்காமல் இருந்தால் கர்த்தருடைய திட்டம் நின்று போகாது. இந்தியாவிலுள்ள உன் சகோதரர் மற்றும் சகோதரிகளின் இரட்சிப்பு வேறொருவர் மூலமாக நிறைவேறும். நீ தான் உனக்கு வரக்கூடிய ஆசீர்வாதத்தை இழப்பாய். கர்த்தர் உன்னை வைத்திருக்கும் இடத்தையும் உன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பையும் நினைத்துப் பார். அதைக் கொண்டு கர்த்தருடைய வேலையை செய்யாவிட்டால், உன்னால் யாருக்கு என்ன பயன்?        

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னை வைத்திருக்கும் இடத்தில் உமக்காக உழைக்கவும், பிறருக்கு உதவி செய்யவும் என்னை உபயோகியும். ஆமென்.